தனியார் நிறுவன ஊழியரை கடத்தி ₹20 லட்சம் பறிப்பு கைதானவர்கள் எந்த கருணையும் பெற தகுதியற்றவர்கள்: ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது ஐகோர்ட் கருத்து
சென்னை, ஜன.18: தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி ₹20 லட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங் மற்றும் வருமான வரித்துறை அலுவலர் தாமோதரன் ஆகியோர் எந்த கருணையும் பெற தகுதியற்றவர்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி, ₹20 லட்சம் பறித்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், ராஜா சிங் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் செல்வம், ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென்று கோரினார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை முடிந்துவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டுமென்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் எந்த கருணையும் பெற தகுதியற்றவர்கள் என கருத்து தெரிவித்து ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.