சென்னை மலர் கண்காட்சிக்கு குழந்தைகள் வருகை அதிகரிப்பு
சென்னை,சென்னை, தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில், தோட்டக்கலை துறை சார்பில் நடைபெறும் மலர் கண்காட்சியைக் காணவரும் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் ரயில், கார், படகு, யானை, மயில், முதலை, ஆமை போன்ற உருவங்களை பலவித வண்ண மலர்களால் உருவாக்கி வைத்திருப்பதுதான்.
ஊட்டி,கொடைக்கானல் போன்ற இடங்களில், அங்கு நிலவும் சீதோஷ்ணம் காரணமாக மலர்கள் அவ்வளவு எளிதாக வாடாது, ஆனால், வெயில் வாட்டி எடுக்கும் சென்னையில் மலர் கண்காட்சி நடத்துவது என்பது சவலான விஷயமே. அந்த சவாலை சாத்தியமாக்கி, சாதனையாகவும் ஆக்கியிருக்கின்றனர்.
மலைப் பிரதேசங்களில் மட்டுமே காணக்கூடிய பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்துாரியம், பெண்டாஸ், சாமந்தி, டயாந்தஸ், சினியா, டொரினியா, கேலண்டுலா, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பான்ஸி, டெல்பினியம், பால்சம், ஹைட்ராஞ்சியா, பாய்ன்செட்டியா, பென்ஸ்டிமான், டேலியா, வெர்பினா, ஆன்டிரினம், ஜெரேனியம், பென்டாஸ், வயலா, ஜெர்பரா, ஆர்கிட்ஸ் போன்ற மலர்களை, இங்கு அதே செழுமையுடன் வளர்த்து காண்பித்துள்ளனர்.
‘கண்காட்சி நடைபெறும் நாட்களில், இந்த மலர்கள் வாடாமல் பராமரித்தும் வருகின்றனர்.
ஒன்றுக்கு இரண்டு மலர் கடிகாரங்கள் உள்ளன. அவை டம்மியாக இல்லாமல், நிஜமாகவே சரியான நேரத்தைக்காட்டியபடி ஓடுகிறது.
கண்காட்சியைக் காணவரும் மக்களை வரவேற்கும் இதய வடிவிலான வரவேற்பு வளைவுகளில், மக்கள் பெரிதும் மனதை பறிகொடுத்து வருகின்றனர். இது போக பட்டாம்பூச்சி வடிவிலான வளைவுகளும் மனதைக் கவர்கிறது.
இந்த, 16 நாள் மலர் கண்காட்சிக்காக, ஆறு மாதமாகவே உழைத்து வந்ததாக சம்பந்தப்பட்ட துறையினர் கூறி வியப்பில் ஆழ்த்தினர். ரயில் போன்ற உருவத்தை வடிவமைப்பதற்காக மட்டுமே, 4,000 சிறிய மலர்த்தொட்டிகள் பயன்படுத்தி உள்ளனர்.
இந்த மலர் கண்காட்சி வரும், 18ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும். மாலையில் கலை நிகழ்ச்சிகளும் உண்டு.
பெரியர்களுக்கு 200 ரூபாய்; சிறியவர்களுக்கு 150 ரூபாய் நுழைவு கட்டணம் உண்டு.