விடுதலையான அன்றே மீண்டும் பைக் திருடிய வாலிபர்
அம்பத்துார், புழல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித், 22. இவர் மீது மாதவரம் மற்றும் புழல் காவல் நிலையங்களில், வழக்குகள் உள்ளன. இதில், திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்
கடந்த 13ம் தேதி மாலை சிறையில் இருந்து விடுதலையான அஜித், ‘டாஸ்மாக்’ மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு, மீதி கையில் இருந்த 20 ரூபாயுடன் ேஷர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அதில், அம்பத்துார் அடுத்த சண்முகபுரத்திற்கு வந்துள்ளார். அங்கே சுற்றித்திருந்துள்ளார்.
இரவு 11:00 மணியளவில் துலுக்கானத்தம்மன் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிரஞ்சன், 35, என்பவரது ‘ராயல் என்பீல்டு’ பைக்கை திருடியுள்ளார்.
அதீத மது போதையில் இருந்ததால், அவரால் பைக்கை ஓட்டி செல்ல முடியவில்லை. இதையடுத்து தள்ளியபடி சென்றுள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த அம்பத்துார் போலீசார், அஜித்தை பிடித்து விசாரித்தனர்.
இதில், புழல் சிறையில் இருந்து விடுதலையானதையும், செலவிற்கு பைக் திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். அஜித்தை காவல் நிலையம் அழைத்து வந்த அம்பத்துார் குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.