காயங்களுடன் மிதந்த 3 உடல் உத்திரமேரூரில் கொடூரம்
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது விழுதவாடி கிராமம். இக்கிராமத்தில், மேய்ச்சல் நிலங்களையொட்டி, தாங்கல் பகுதி உள்ளது.
நேற்று, மாட்டு பொங்கலையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த கால்நடை பராமரிப்போர் சிலர், தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தப்படுத்த, தாங்கல் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு சென்றனர்.
அப்போது, தாங்கல் நீரில் மூன்று ஆண் சடலங்கள் மிதப்பதை கண்ட அவர்கள், உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் எஸ்.பி., உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார், உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் உடல்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட உடல்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இது குறித்து, போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் விஸ்வா, 18, சிவசங்கர் மகன் பரத், 17, ஏழுமலை மகன் சத்ரியன், 17, என்பது தெரிந்தது.
அவர்கள் மூவரும், கடந்த 12ம் தேதி, தங்களது வீடுகளில் இருந்து மாயமானதாகவும், வெட்டு காயங்கள் உள்ளதால் கொலை செய்து தாங்கலில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.