மணலிக்கு 7,400 மின் இணைப்புகள் மீண்டும் மாற்றம்

மணலி,நிர்வாக வசதிக்காக, மணலி புதுநகருக்கு மாற்றப்பட்ட, 7,400 மின் இணைப்புகள் மீண்டும் மணலிக்கே மாற்றப்பட்டதால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மின்வாரியத்தின் மணலி உதவி பொறியாளர் நிர்வாகத்தின்கீழ் இயங்கி வந்த, ஜலகண்ட மாரியம்மன், காவல் குடியிருப்பு, பாரதியார் தெரு, சாலைமா நகர்,

ஹரிகிருஷ்ணபுரம், எடப்பாளையம், கலைஞர் நகர், ஜாகீர் உசேன் தெரு உள்ளிட்ட, 15 க்கும் மேற்பட்ட நகர்களை சேர்ந்த, 7,400 மின் இணைப்புகள் உள்ளன.

இந்த இணைப்புகள் நிர்வாக வசதிக்காக, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மணலிபுதுநகருக்கு மாற்றப்பட்டன.

இதனால், புதிய மின் இணைப்புகள் பெறுதல், மின் கட்டணம் செலுத்துதல் என, பல்வேறு சேவைகளுக்காக, மணலி மக்கள் பல கி.மீ., துாரம் பயணித்து, மணலிபுதுநகர் செல்ல வேண்டியிருந்தது.

தவிர, மின் சேவையில் தடங்கல் ஏற்பட்டால், எல்லை பிரச்னையை சுட்டிக்காட்டி, மணலி மற்றும் மணலிபுதுநகர் உதவி பொறியாளர் அலுவலக ஊழியர்கள் தட்டிக் கழித்து வந்தனர்.

எனவே, நிர்வாக வசதிக்காக, மணலிபுதுநகருக்கு மாற்றப்பட்ட, 7,400 மின் இணைப்புகளை மீண்டும் மணலிக்கே மாற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர்.

ஓரிரு வாரங்களாக, மணலிபுதுநகருக்கு மாற்றப்பட்ட மணலியின் மின் இணைப்புகள் மீண்டும் அதே பகுதிக்கு மாற்றும் பணி நடந்து வருகிறது. இனி, மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்பு பெறுதல் போன்ற சேவைகளுக்கு, பல கி.மீ., துாரம் அலைய வேண்டி இருக்காது என, மணலி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *