ரவுடி கொலையை தடுக்க முயன்ற மனைவியும் பலி
காசிமேடு, காசிமேடு, திடீர் நகரைச் சேர்ந்த உலகநாதன், 33. இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 22 வழக்குகள் உள்ளன. கணவனை பிரிந்த மாலதி, 30, என்பவருடன் சேர்ந்து வசித்தார். மாலதி மீதும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், 14ம் தேதி இரவு, இருவரும் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல், உலகநாதனை கத்தியால் சரமாரியாக வெட்டியது. தடுக்க முயன்ற மாலதிக்கும் வெட்டு விழுந்தது. இதில், உலகநாதன் உயிரிழந்தார். மாலதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காசிமேடு போலீசாரின் விசாரணையில், மாலதியுடன் கஞ்சா விற்பனை தொடர்பான மோதலில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி தேசிங்கு, 46, என்பவரை, 10 பேர் கும்பல், கடந்த ஆண்டு ஏப்., 24ல் வெட்டிக் கொன்றது. கொலையாளிகள் ஜாமினில் வெளியே வர, உலகநாதன் உதவியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தேசிங்கின் மகன் வல்லரசு, 24, என்பவர், கூட்டாளிகள் ஆறு பேருடன் சேர்ந்து, உலகநாதனை கொலை செய்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், மாலதி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.