ரவுடி பன்னீர்செல்வம் எரித்து கொலை: பழி தீர்த்ததாக ‘பாம்’ சரவணன் வாக்குமூலம்
சென்னை, சென்னை, புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த ரவுடி சரவணன், 41. இவர் மீது 26க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்கும் நோக்கத்தில், ரவுடிகள் சம்பவம் செந்தில் உள்ளிட்டோரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு வந்துள்ளார்.
ஆந்திர மாநிலம், வரதபாளையத்தில் பதுங்கி இருந்த சரவணனை, சென்னை மாநகர ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். சென்னைக்கு அழைத்து வந்தபோது, வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.
சிகிச்சை
இதனால், சரவணனின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காயமடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
போலீசாரிடம் சரவணன் அளித்துள்ள வாக்குமூலம்:
என் அண்ணன் தென்னரசு, பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலராக இருந்தார். 2015ல், சென்னை அருகே, தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில், என் அண்ணனை குடும்பத்தார் கண் முன், ரவுடிகள் ஆற்காடு சுரேஷ், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கொலை செய்தனர்.
இக்கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி செயல்பட்டு வந்தேன்.
கடந்த, 2018ல், என் அண்ணன் தென்னரசுவை கொன்ற, சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி பன்னீர்செல்வத்தை, என் கூட்டாளிகள் வீரா, அப்பு மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோருடன் சேர்ந்து ஆந்திர மாநிலம், கூடூர் ஆற்றங்கரைக்கு கடத்தினோம். அங்கு கொலை செய்து, உடலை எரித்து விட்டோம்.
மனைவி மனு
தற்போது, என் கூட்டாளிகள் வீரா, அப்பு, ராஜேஷ் ஆகியோரும் உயிருடன் இல்லை. என் உயிருக்கு எதிரிகளால் ஆபத்து உள்ளதால் ஆந்திராவுக்கு தப்பி விட்டேன்.
அவ்வப்போது சென்னைக்கு வந்து செல்வேன். கடந்த 2023ல், சென்னை பட்டினப்பாக்கத்தில், ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டார்.
இதற்கு பழி வாங்கும் நோக்கில், ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இக்கொலையில் ஈடுபட்ட ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோரை தீர்த்துக்கட்ட காத்திருந்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாம் சரவணனுக்கு சிகிச்சை அளிக்க கோரி, அவரது மனைவி மகாலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.