கிராமிய கலைஞர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.5,000

சென்னை : சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் கிராமியக் கலைஞர்களுக்கு, ஒருநாள் ஊதியமாக 5,000 ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கலை பண்பாட்டுத்துறை சார்பில், மூன்று ஆண்டுகளாக, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு விழாவை, கடந்த 13ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சென்னையில் 18 இடங்களில், நேற்று முன்தினம் முதல் வரும் 17 ம் தேதி வரை, தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு நிகழ்ச்சியில், 1,500 கிராமியக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக்குழுக்களாக பிரிந்து, வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, இரண்டு உடைகள், போக்குவரத்து வசதி உட்பட அனைத்தும், தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ஒருநாள் ஊதியமாக, 5,000 ரூபாய் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கலை நிகழ்ச்சிகளை, சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு சென்னை புறநகர் பஸ் நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில், டிஜிட்டல் வீடியோ வாகனங்களில், மாலை 6:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, நேரடியாக ஒளிபரப்ப, செய்தித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

பாராட்டு சான்று

கலை பண்பாட்டுத்துறை சார்பில், சென்னை கீழ்ப்பாக்கம், ஏகாம்பரநாதர் கோவில் திடலில், சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவையொட்டி, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

கலைவிழாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு, தி.மு.க., – எம்.பி., கனிமொழி, பாராட்டு சான்றிதழை வழங்கினார். அப்போது, ”சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா, மாநகரின் முக்கியமான 18 இடங்களில், 17ம் தேதி வரை நடக்கிறது.

கலைகள் தன் மரபிலிருந்து விலகாமல் பாதுகாத்து வரும் பெருமைக்கு உரியவர்கள், கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களே. ”அப்படிப்பட்ட கலைகளையும், கலைஞர்களையும் அங்கீகரிக்கும் இரண்டாவது நாள் நிகழ்ச்சியை, ஏராளமான பொதுமக்களோடு நானும் கண்டு மகிழ்ந்தேன்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *