காணும் பொங்கலுக்கு குடும்பத்துடன் குவியும் மக்கள் உற்சாகம்! 500 சிறப்பு பஸ் இயக்கம்; போக்குவரத்திலும் மாற்றம்

சென்னை : பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று, காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, சென்னை வாசிகள் மெரினா கடற்கரை, வண்டலுார் பூங்கா, செம்மொழி பூங்காவில் நடக்கும் சென்னை மலர் கண்காட்சி, தீவுத்திடல் பொருட்காட்சி, கிண்டி சிறுவர் பூங்கா என, பொழுதுபோக்கு இடங்களுக்கு குதுாகலத்துடன் செல்வர் என்பதால், கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெரினா காமராஜர் சாலையில், போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை :

காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவர். காமராஜர் சாலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்படாது.

காமராஜர் சாலையில் வாகனங்கள் அதிகரிக்கும்போது, போர்நினைவு சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம் போல் கலங்கரை விளக்கம் நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், கண்ணகி சிலையில் இடதுபுறமாக திரும்பி, பாரதி சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி வழியாக, வாலாஜா சாலைக்கு செல்லலாம்.

வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை, பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

கண்ணகி சிலையில் இருந்து, பாரதி சாலை வரை ஒருவழி பாதையாக செயல்படும். பெல்ஸ் சாலை,பாரதி சாலை சந்திப்பில், இருந்து கண்ணகி சிலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

காமராஜர் சாலையில் இருந்து, கலங்கரை விளக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள், மதியம் 1:00 முதல் இரவு 10:00 மணி வரை அனுமதிக்கப்படாது. இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

500 சிறப்பு பஸ்கள்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை:

காணும் பொங்கல் பண்டிகை, இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவர்.

இதை கருத்தில்கொண்டு, பொதுமக்கள் வசதிக்காக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாமல்லபுரம், கோவளம், எம்.ஜி.எம்., – வண்டலுார் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

பயணியரை பாதுகாப்பாக, பஸ்களில் இருந்து ஏற்றி இறக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பணியில் சிறப்பு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வண்டலுார் பூங்கா ‘ரெடி’

வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, காணும் பொங்கலின்போது, ஏராளமான பார்வையாளர்கள் வருவர். கடந்தாண்டு காணும் பொங்கலுக்கு, 23,000 பேர் மட்டுமே வந்தனர். வண்டலுார் பூங்காவில், டிக்கெட் கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதே பார்வையாளர்கள் குறைய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தாண்டு காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது.

l ஆன்லைன் மற்றும் வாட்ஸாப் வாயிலாக நுழைவு கட்டண டிக்கெட் பெறலாம். நேரடியாக டிக்கெட் பெறும் மையங்களும் திறக்கப்பட்டுள்ளன

l பூங்காவில் இருந்து 500 மீட்டர் துாரத்தில், வண்டலுார் – கேளம்பாக்கம் சாலையில், கார், பைக், வேன் மற்றும் கனரக வாகனங்களுக்கு நிறுத்துமிடம் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பூங்காவிற்கு பார்வையாளர்களை ஏற்றி செல்ல, இலவச வாகன வசதி உள்ளது

l பாதுகாப்பு பணிக்காக 150 போலீசார், சென்னை, வேலுார், தர்மபுரி மற்றும் விழுப்புரம் வட்டங்களை சேர்ந்த 115 வனத்துறையினர், 50 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக 25 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன

l பூங்காவிற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மற்றும் லயன் சபாரி வாகனங்கள் இயங்காது

l பார்வையாளர்கள், விலங்குகளுக்கு உணவு அளிக்கவோ, கிண்டல் செய்யவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கிண்டியில் ஏற்பாடுகள்

கிண்டி சிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சாதாரண நாட்களில், ஒரு நுழைவாயில் செயல்படும். இன்று, மூன்று நுழைவாயில் செயல்படும். ஒவ்வொரு நுழைவாயிலிலும், டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. எளிதில் டிக்கெட் எடுக்க, ‘கியூஆர் கோடு’ வைக்கப்பட்டு உள்ளது.

இதோடு, 86676 09954 என்ற ‘வாட்ஸாப்’ எண்ணில் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். ஆட்டோ, கார், பைக் நிறுத்த தனித்தனி இடவசதி செய்யப்பட்டு உள்ளதாக, பூங்கா நிர்வாக அதிகாரிகள் கூறினர்.

மெரினா செல்வோருக்கு வாகன நிறுத்த இடங்கள்

 

* போர்ஷோர் சாலை

* விக்டோரியா வார்டன் விடுதி

* கலைவாணர் அரங்கம் பார்க்கிங்

* பிரசிடென்சி கல்லுாரி

* சென்னை பல்கலை வளாகம்

* சுவாமி சிவானந்தா சாலை

* எம்.ஆர்.டி.எஸ்., – சேப்பாக்கம்

* லேடி வெலிங்டன் பள்ளி

* குயின் மேரிஸ் மகளிர் கல்லுாரி

* சீனிவாசபுரம் லுாப் சாலை மைதானம்

* பி.டபிள்யூ.டி., மைதானம், தலைமை செயலகத்திற்கு எதிரே

* செயின்ட் பீட்ஸ் மைதானம்

* அன்னை சத்யா நகர்

* ஈ.வி.ஆர்., சாலை, மருத்துவக் கல்லுாரி மைதானம்

* தலைமை செயலகத்தின் உள்ளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *