மூதாட்டி மார்பு குழிக்குள் 1.2 கிலோ கட்டி அகற்றம்
சென்னை:மூதாட்டியின் மார்பு குழிக்குள் இருந்த, 1.2 கிலோ புற்றுநோய் கட்டியை, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்.
இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்., குழும நிறுவன தலைவர் சத்யநாராயணன் கூறியதாவது:
செவிலியராக பணியாற்றிய, 78 வயது மூதாட்டி, மார்பு குழிக்குள் இருந்த புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்கு முன், அறுவை சிகிச்சையில், கட்டியின் பகுதியளவு அகற்றப்பட்ட நிலையில், சில மாதங்களில் வேகமாக வளர்ச்சியடைந்தது.
அவரது வலது நுரையீரலை அழுத்தி நொறுக்கியிருந்தது. அவரது இதயம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளை, இடதுபுறம் நோக்கி தள்ளியது. இதையடுத்து, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனையில் கடுமையான சுவாசப் பிரச்னையோடு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, நெஞ்சக அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் சுஜித் வேலாயுதன் இந்திரா தலைமையில், டாக்டர்கள் ஸ்ரீநாத், நெம்பியன் ராஜ ராஜன், சிந்து ஆகியோர் கொண்ட குழுவினர், ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்தனர்.
இதில், 1.2 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. நீரிழிவு நோயாளியான மூதாட்டிக்கு, இச்சிகிச்சை மேற்கொள்வது சவாலாக இருந்தது. எனினும், மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.