பள்ளி இடை நிற்றல் மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தும் போலீசார்
சென்னை:செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 28,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 1.50 லட்சம் பேருக்கு மேல் வசிக்கின்றனர்.
இங்குள்ள, எட்டு அரசு பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இதில், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த பல மாணவர்கள், தேர்வு பயத்தில், ஜன., பிப்., மார்ச் மாதங்களில், பள்ளி செல்வதில்லை.
ஐந்து ஆண்டுகளில், 400க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிப்பை பாதியில் நிறுத்தினர். அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, தேர்வு எழுத வைக்க, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்டது.
இதனால், இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தது. இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, பள்ளிக்கரணை காவல் துணை கமிஷனரின் நேரடி பார்வையில் நியமிக்கப்பட்ட சிறப்பு போலீசார், மாணவ – மாணவியரிடம் உரையாடுகின்றனர்.
பள்ளி, வீடுகளுக்கு சென்று இடைநிற்றல் குறித்து விசாரிக்கின்றனர். காரணம் கண்டறிந்து, அதை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு, அனைத்து மாணவ – மாணவியரும் தேர்வு எழுதும் வகையில், தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக, பள்ளிக்கரணை காவல் துணை கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.