‘ரூ.80 கோடியில் மழைநீர் வடிகால் தி.நகரில் கட்டப்பட்டுள்ளது’
தி.நகர், சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 141வது வட்ட தி.மு.க., சார்பில், கழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு, 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தி.நகர், காமராஜர் காலனியில் நேற்று நடந்தது.
சென்னை தென்மேற்கு மாவட்ட செயலர் வேலு மற்றும் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் 141வது வட்ட செயலர் துரை, 133வது வார்டு கவுன்சிலரும் தி.நகர் மேற்கு பகுதி செயலருமான ஏழுமலை, 141வது வார்டு கவுன்சிலர் ராஜா அன்பழகன், மகளிர் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, வட்ட செயலர்கள் மாரி, செந்தில்குமார், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசியதாவது:
என் தந்தை மறைந்த பழக்கடை ஜெயராமன் வாழ்ந்த இடம். எனக்கு மாநகராட்சி கவுன்சிலர் அந்தஸ்தை கொடுத்த வட்டம். இந்த வட்டம் தான் என் தாய் வீடு. இரவு, பகல் பாராமல் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். இந்த பகுதி வட்ட செயலர், என் வேலையை பாதியாக குறைத்துள்ளார்.
காமராஜர் காலனியில் உள்ள குடியிருப்புகள், இன்னும் மூன்று மாதத்தில் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் புது குடியிருப்புகள் கட்டப்படும்.
இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க, முத்துரங்கன் சாலையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. தி.நகர் தொகுதியில், இதுவரை 80 கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது.
இன்னும், 3 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கட்டப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.