பஸ், ரயில் நிலையங்களில் நெரிசல் 2 நாளில் 6.50 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர் சொந்த ஊர் செல்ல வசதியாக, கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து, நேற்று முன்தினம் முதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாவது நாளாக நேற்றும், வழக்கமான 2,092 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் பயணிக்க, முக்கிய நிலையங்களில் குவிந்த பயணியர், முண்டியடித்து பேருந்துகளில் ஏறினர்.
அதேபோல், எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும், கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆம்னி பேருந்துகளிலும், ஏராளமானோர் பயணித்தனர்.
கடந்த இரு நாட்களில், அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களில், 6.5 லட்சம் பேர் பயணித்தனர். சொந்த வாகனங்களிலும், பல குடும்பத்தினர் சென்றனர். இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்டவற்றில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வழக்கமாக பரனுார், ஆத்துார் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அதை தவிர்க்க, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பரனுார் — ஆத்துார் வரை 200க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே நின்று, வாகனங்கள் சீராக செல்ல வழிவகுத்தனர்.
தவிர, இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் செல்வதற்கு தனித்தனி பாதைகளும் அமைத்திருந்தனர்.