‘சைபர் க்ரைம்’ வழக்குகள் பதிவு கடந்தாண்டில் … 2,732! போலி வங்கி கணக்குகளில் ரூ.36 கோடி முடக்கம்
சென்னை : சென்னை மற்றும் புறநகரில், நிதி மோசடி போன்ற பல்வேறு சைபர் க்ரைம் தொடர்பாக, 2024ம் ஆண்டில், 2,732 புகார்கள் பெறப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், 365 வழக்குகளில், போலி வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு, 36 கோடி ரூபாய் முடக்கப்பட்டு உள்ளது.
சென்னை, புறநகரில் சமீப காலமாக, ‘ஆன்லைன்’ மோசடிகளில் பணத்தை இழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சைபர் க்ரைம் தொடர்பாக, தினமும் 30 புகார்கள் பதிவாகின்றன.
கணினி, நெட்வொர்க் அல்லது பிற டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி, ‘ஆன்லைன்’ வர்த்தகம், வேலை வாய்ப்பு, லோன் தருவது, கிரெடிட் கார்டு லிமிட் அதிகரித்து தருவது, தவறான பார்சல் அனுப்பி இருப்பதாக மிரட்டுவது போன்றவை வாயிலாக, சைபர் மோசடிகள் செய்யப்படுகின்றன.
குறிப்பாக, உங்களது பெயரில் அனுப்பப்பட்ட பார்சலில், போதை பொருள் உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் கடத்தப்படுவதாகவும், தங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் எனக்கூறி மிரட்டல், பணம் பறிப்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளன
இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து, பல்வேறு வகையில், மத்திய, மாநில அரசுகள், காவல் துறை, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
அதன்படி, கடந்தாண்டில் மட்டும் சென்னையில், பிரபல கல்லுாரிகள், பள்ளிகள், ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவற்றில், ‘போலி டிஜிட்டல் கைது, ஆன்லைன் ட்ரேடிங் மோசடி, சமூக ஊடக பாதுகாப்பு மற்றும் ஆன்லைன் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், 2024ம் ஆண்டில், தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பக இணையதளத்தில், பல்வேறு சைபர் குற்றங்கள் தொடர்பாக, சென்னை, புறநகரில் 2,732 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 325 புகார்களில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், 36 பேரை கைது செய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தில் ஈடுபட்ட ஏழு பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைபர் க்ரைம் போலீசார் கூறியதாவது:
தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பக இணையதளமான, www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அளிக்கப்படும் அனைத்து புகார்களும், வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவே கருதப்படும்.
அதில், சைபர் க்ரைம் போலீசார் நடத்திய புலன் விசாரணையில், 325 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
போலி வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு, 36.63 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் இழந்த, 12.31 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மற்ற வழக்குகளில் தொடர் விசாரணை நடந்து வருகிறது
சென்னையை தவிர, ஆவடி, தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தின் வழக்குகளும், சென்னை சைபர் க்ரைமில் பதிவாகின.
சைபர் குற்றங்கள் தொடர்பாக, ‘1930’ என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.