ஒமேகா – நெல்லை நாடார் பள்ளிகள் பைனலுக்கு தகுதி
சென்னை, எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளை, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில் நடத்தி வருகின்றன.
இதில், ‘டி – 20’ கிரிக்கெட் போட்டியில், பல்வேறு பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன. இதில், அரையிறுதி போட்டிக்கு நெல்லை நாடார், மேற்குமாம்பலம் அரசு பள்ளி, சர் முத்தா, மற்றும் ஒமேகா பள்ளி அணிகள் பங்கேற்று தகுதி பெற்றன.
நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில், நெல்லை நாடார் மற்றும் மேற்கு மாம்பலம் அரசு பள்ளி அணிகள் மோதின. இதில், ‘டாஸ்’ வென்ற நெல்லை நாடார் பள்ளி, முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு, 145 ரன்கள் அடித்தது.
போட்டியில் மேற்கு மாம்பலம் அரசு பள்ளி ஆதிக்கம் செலுத்தினாலும், அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால், 19.5 ஓவர்களில் 139 ரன்கள் அடித்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. போராடி வெற்றி பெற்ற நெல்லை நாடார் பள்ளி அணி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று காலை நடந்த இரண்டாவது அரையிறுதியில், சர் முத்தா மற்றும் ஒமேகா பள்ளி அணிகள் மோதின. முதலில் விளையாடிய, சர் முத்தா பள்ளி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 110 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய, ஒமேகா அணி, 17 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து, 111 ரன்களை அடித்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து, இறுதிப்போட்டியில் நெல்லை நாடார் பள்ளி அணியுடன் ஒமேகா அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.