சிசுவை கொன்ற கொடூர தாய் வாலாஜாபாத் அருகே பயங்கரம்
வாலாஜாபாத்,காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் களியனுாரைச் சேர்ந்தவர் பூமிகா, 24. செங்கல்பட்டு அருகே, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றும் திண்டிவனத்தைச் சேர்ந்த வாலிபரோடு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் நெருங்கி பழகி வந்ததையடுத்து, பூமிகா கர்ப்பமானார். நேற்று முன்தினம் பூமிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அன்றிரவே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று அதிகாலை பூமிகா, பச்சிளம் குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து சிவகாஞ்சி மற்றும் வாலாஜாபாத் போலீசார் விசாரித்தனர்.
காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில் உள்ள ‘சிசிடிவி’ கேமரா காட்சிகளை வைத்து, பூமிகாவை மட்டும் போலீசார் பிடித்தனர். முத்தியால்பேட்டை ஊராட்சி வள்ளுவப்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில், குழந்தையை பூமிகா வீசி கொன்றது தெரியவந்தது.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில், பூமிகா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.