வசூல் பணம் 16 லட்சத்துடன் பெட்ரோல் ‘பங்க்’ ஊழியர் மாயம்
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, டிமல்லஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மரிய ஜோஸ்பின் சரினா, 49. இவர், வீட்டருகே ‘மரியா’ எல்.பி.ஜி., மற்றும் பெட்ரோல் ‘பங்க்’ வைத்துள்ளார்.
கடந்தாண்டு ஜூன் முதல் மேட்டுப்பாளையம் ரங்கன் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார், 32, என்பவர், இங்கு மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் ‘உடல்நிலை சரியில்லை’ எனக்கூறி, பணிக்கு வராமல் இருந்துள்ளார். வசூல் பணம் நிறுவனத்திடம் ஒப்படைக்காத நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி, சபரிமலைக்கு செல்வதாக கூறி விடுமுறை எடுத்துள்ளார்.
வசூல் பணம் குறித்து சரினா, சதீஷ்குமாரிடம் கேட்டபோது, அவர், அலுவலக லாக்கரில் வைத்துள்ளேன்’ எனக்கூறியுள்ளார்.
இதையடுத்து, கடந்த 6ம் தேதி லாக்கரில் பணத்தை தேடிய போது, பணம் எதுவும் இல்லை. சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது.
வசூல் பணம் 16.23 லட்ச ரூபாயுடன் சதீஷ்குமார் தலைமறைவானது குறித்து, சரினா புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கண்காட்சி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.