4வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை
அம்பத்துார், அம்பத்துார், புதுார் பானு நகர் 3வது பிரதான சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று மாலை 4:30 மணியளவில் 4வது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்துார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், அம்பத்துார், ஒரகடம், வளர்மதி நகரைச் சேர்ந்த ஐ.டி., ஊழியரான நிவேதா, 27, என்பதும், சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
பெற்றோரை இழந்த நிவேதா, தாய்மாமன் வீட்டில் வசிந்து வந்துள்ளார். இவருக்கு, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் 19ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், பானு நகரில் வசிக்கும் அவரது தோழி ஸ்வேதா வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார். ஸ்வேதா வீட்டில் இல்லாத நிலையில், குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
மேலும் விசாரணையில், நிவேதா கடந்த சில தினங்களாக, வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை எனக் கூறி வந்ததாகவும், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.