அடையாறு மண்டல கூட்டத்தில் தலைவருடன் கவுன்சிலர் வாக்குவாதம்
அடையாறு,அடையாறு மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், கவுன்சிலர்கள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்கள் வார்டில் உள்ள பிரச்னை குறித்து பங்கேற்றனர்.
மணிமாறன், தி.மு.க., 177வது வார்டு: என் வார்டில் மண்டபம், வார்டு அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை, குளம் வெட்ட மட்டும் முந்தி சென்று பணி செய்கிறீர்கள்.
அதிகாரிகள்: வார்டு அலுவலகம் கட்டும் இடத்தில் வகை மாற்று செய்ய வேண்டும். குளம் வெட்டும் இடத்தை முதல்வர், துணை முதல்வர் பார்த்து சென்றனர். வேளச்சேரி வெள்ள பாதிப்பை தடுக்க குளம் வெட்டுகிறோம்.
இதை ஏற்க மறுத்து, மணிமாறன், கோபமாக பேசினார்.
இதற்கு, மண்டல தலைவர் துரைராஜ், 176வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஆனந்தம் ஆகியோர், ‘இது மன்ற கூட்டம். இங்கு அமைதியாக, நாகரிகமாக பேசுங்கள். பிரச்னையை மட்டும் கூறுங்கள். தனிப்பட்ட ரீதியில் பேசாதீர்கள்’ என்றனர்.
”நான் இந்த ஊரில் பிறந்தவன்; நீ வெளி இடத்தில் இருந்து வந்தவன். உனக்கு பேச தகுதி இல்லை,” என, கவுன்சிலர் ஆனந்தனிடம், மணிமாறன் மோதினார்.
பின், ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தரக்குறைவான வார்த்தைகளில் பேசிக்கொண்டனர். அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால், கூட்டத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, சாலை, வடிகால், கழிப்பறை வசதி உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.