ஆட்டோ கட்டணம் இரு மடங்கு
ஆட்டோ கட்டணம் இரு மடங்கு உயர்த்துவதாக அறிவிப்பு
சென்னை,ஆட்டோ மீட்டர் கட்டணம், வரும் பிப்., 1ம் தேதி முதல் 1.8 கி.மீட்டருக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படும்’ என, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு, மீட்டர் கட்டணத்தை அரசு மாற்றி அமைத்தது.
முதல் 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய் காத்திருப்பு கட்டணம், 5 நிமிடங்களுக்கு 3.50 ரூபாய், இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து, போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 12 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை.
ஆட்டோ தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பின், கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆட்டோ ஓட்டுனர்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடர்பான பரிந்துரை பெற்றது.
ஆனால், கட்டணத்தை இறுதி செய்யவில்லை. ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றியமைப்பது தொடர்பான முன்மொழிவு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிருப்தியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள், ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து அறிவித்துள்ளனர்.
இது குறித்து, அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாஹீர் ஹுசைன் கூறியதாவது:
தமிழகத்தில் 12 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாததால், ஓட்டுனர்கள் சார்பில் வரும் பிப்., 1 முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.
அதன்படி, முதல் 1.8 கி.மீக்கு 50 ரூபாய், கூடுதல் கி.மீ.,க்கு 18 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஒரு நிமிடத்துக்கு 1.5 ரூபாய் என்ற வகையில் வசூலிக்கப்படும்.
இந்த கட்டணத்தின்படியே, தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து ‘ப்ரீபெய்டு’ ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த கட்டணத்தை உரிமைக்குரல் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த கூட்டமைப்பின் ஆட்டோ ஓட்டுனர்கள் பின்பற்றுவர்.
இவ்வாறு அவர் கூறினார்