பீச் – பூங்கா நிலையம் இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு தடத்தில், எழும்பூர் – பூங்கா ரயில் நிலையத்தை அடுத்துள்ள சிக்னலில், நேற்று மாலை 6:40 மணி அளவில் பழுது ஏற்பட்டது. இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை கடற்கரை – பூங்கா இடையே மின்சார ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டன.
கடற்கரையில் இருந்து செல்ல வேண்டிய மின்சார ரயில்கள், பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து திருப்பி விடப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த தொழில்நுட்ப பணியாளர்கள், பழுதான சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடற்கரை – பூங்கா நகர் இடையே, ஒரு மணி நேரம் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், சேத்துப்பட்டு, எழும்பூர், பூங்கா நகர் ரயில் நிலையங்களில், பயணியர் மின்சார ரயிலில் காத்திருந்து அவதிப்பட்டனர். இரவு 7:40 மணிக்கு பின், இந்த தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
நள்ளிரவில் தவிப்பு
சென்னை கடற்கரையில் இருந்து, கும்மிடிப்பூண்டி நோக்கி, நேற்று முன்தினம், இரவு 9:20 மணிக்கு புறநகர் ரயில் புறப்பட்டது.
இரவு 12:45 மணிக்கு மீஞ்சூர் ரயில் நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து அனுப்பம்பட்டு நோக்கி சென்றபோது, திடீரென ரயிலின் மேற்பகுதியில் இருந்த மின்சார கொக்கி பழுதானது.
இதனால், ரயில் மீஞ்சூர் – அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே நின்றது. அடுத்தடுத்து வந்த புறநகர் மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
ரயில்வே பராமரிப்புத் துறையினர் அங்கு சென்று, பழுதான மின்கொக்கியை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
நள்ளிரவு, 12:45 மணிக்கு பழுதான மின்கொக்கி சரி செய்யப்பட்டு, புறநகர் ரயில் புறப்பட்டது. அதை தொடர்ந்து, மற்ற ரயில்களும் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டன.
இந்த சம்பவத்தால், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நள்ளிரவில் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதித்து, பயணியர் பெரும் தவிப்பிற்கு ஆளாகினர்.
மாணவர்கள் சேட்டை
கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு, நேற்று, காலை 6:15 மணிக்கு புறப்பட்ட புறநகர் ரயில், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, 6:35 மணிக்கு சென்றபோது, மர்ம நபர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரயில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே போலீசார், அபாய சங்கிலி இழுக்கப்பட்ட பெட்டிக்கு வந்து விசாரித்தபோதுகல்லுாரி மாணவர்கள் அபாய சங்கிலியை இழுத்துவிட்டு, குதித்து தப்பியது தெரிந்தது. அதையடுத்து, 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.