போகி பண்டிகை முன்னிட்டு விமான சேவையில் மாற்றம்
சென்னை, போகி திருநாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.
இந்த நாளில், பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரிப்பதால், புகை மூட்டம் அதிகமாக காணப்படும்.
இதனால், விமானம் இயக்குவதில் சிக்கல் ஏற்படும். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போகி திருநாளான வரும் 13ம் தேதி அதிகாலை, விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது
போகியன்று, அதிகாலையில் சென்னைக்கு வரும் ‘ஓமன் ஏர்லைன்ஸ், துபாயில் இருந்து வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், கோலாலம்பூரில் இருந்து வரும் ‘ஏர் ஏசியா’ ஆகிய, மூன்று விமான நிறுவனங்கள் அதிகாலை சென்னைக்கு வராமல், தாமதமாக சென்னைக்கு வந்துவிட்டு, இங்கிருந்து தாமதமாகவே புறப்படும்.
அதேபோல், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், கத்தார் ஏர்வேஸ் விமானம், ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களும், விமான சேவை நேரத்தை மாற்றி அமைத்துள்ளது.
இது குறித்து பயணியருக்கு எஸ்.ஓ.பி., முறைப்படி உரிய தகவல் வழங்கப்படும். எனினும், விமான நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று பார்த்து பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்படுகிறது.
வெளிநாடு மட்டுமின்றி உள் நாட்டு விமான சேவையிலும் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.