இது பெண்களுக்கான ஆட்சி தி.மு.க., – எம்.எல்.ஏ., பெருமிதம்

தி.நகர், சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் மேற்கு பகுதி, 133 மற்றும் 133 – ‘அ’ வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஏன் வேண்டும் தி.மு.க.,’ என்ற தலைப்பில், விளக்க உரை கூட்டம், தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது.

இதில், மாவட்ட செயலரும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுமான வேலு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்வில், 133 – ‘அ’ வட்ட செயலர் மாரி, 133 வட்ட செயலர் ஜெய்குமார், மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் மணி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலர் பத்மபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசியதாவது:

பெண்கள் பாதுகாப்புக்கான சட்ட திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தபோது, எங்களுக்கு புல்லரித்துவிட்டது. இது, பெண்கள் வளர்ச்சிக்கான ஆட்சி.

நம் அரசின் சாதனையை சொன்னாலே, மக்கள் நமக்கு ஓட்டளிப்பர். இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ளது. நீங்கள் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என பிரிந்து, தினம் அவர்களை சந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு பகுதி செயலரும், 133வது வார்டு கவுன்சிலருமான ஏழுமலை பேசுகையில், ”கருவில் இருக்கும்போதே உதயநிதி தி.மு.க., தான். அவர் பிறக்கும்போது, அவரது தந்தை ஸ்டாலின் சிறையில் இருந்தார். 30க்கும் மேற்பட்ட நடிகர்கள் கட்சி ஆரம்பித்ததை பார்த்திருக்கிறோம்.

”ஆனால், அவர்கள் யாராலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆர்., மட்டும் தான் ஆட்சியை பிடித்தார்; காரணம், அவரும் தி.மு.க.,வில் இருந்து வந்தவர்,” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *