கடல்வழி பாலம்! கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை அறிக்கை தயாரிப்பதாக அமைச்சர் அறிவிப்பு
சென்னை : ”சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை வரை, 15 கி.மீ., துாரத்திற்கு, கடல் மீது பாலம் அமைக்கும் பணிக்கு, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது,” என, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
துணை சபாநாயகர் பிச்சாண்டி: மும்பையில் அடல் சேது பாலம் போல், சென்னையில் பாலம் அமைக்கப்படுமா?
அமைச்சர் வேலு: சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை வரை, 15 கி.மீ., துாரத்தை இணைக்க, கடல் மீது பாலம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளதா என அறிக்கை தயாரிக்கும் பணியில், நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுள்ளது.
பிச்சாண்டி: மும்பையில் அடல் சேது பாலம், 17,500 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது. நாம் கடல் வழியாக, பட்டினப்பாக்கத்தில் இருந்து, மாமல்லபுரம் வரை சாலை அமைத்தால், போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.
மும்பையில் கடல்சார் வாரியம் அமைத்து, மூன்று பாலங்கள் கட்டியுள்ளனர். கொச்சியில் பாலம் கட்டப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையும் கடல்சார் வாரியம் அமைத்து, கடலில் பாலம் அமைக்க வேண்டும். இதற்கு நிலம் கையகப்படுத்த தேவையில்லை.
அமைச்சர் வேலு: நல்ல ஆலோசனை. ஏற்கனவே கடல்சார் வாரியம் உள்ளது. அந்த வாரியம் வழியாக, சிறு துறைமுகங்களை மேம்படுத்துகிறோம். அடல்சேது பாலத்தை நேரில் பார்வையிட்டேன். அதன் விளைவாக, கலங்கரை விளக்கத்தில் இருந்து, முதல் கட்டமாக நீலாங்கரை வரை, பாலம் அமைக்கும் பணிக்கான, திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசு நிதி பெறுவதா, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதா, மாநில அரசு நிதியில் செயல்படுத்துவதா என, முடிவு செய்யப்படும்
பிச்சாண்டி: சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க, கிண்டியில் ஐந்தடுக்கு பாலம் அமைக்கப்பட்டது. அமெரிக்காவின் டெலாஸ் மாகாணத்தில், 37 அடுக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பொறியாளர்கள் ஆலோசனை பெற்று, சிக்கலான இடங்களில், பல அடுக்கு மேம்பாலம் கட்ட, அரசு முன் வர வேண்டும். நிலம் கையகப்படுத்தினால், நிதி தருவதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
அமைச்சர் வேலு: மத்திய அரசு நிதி தருவதாக சொல்கிறது. நாமும் தொடர்ந்து பல கடிதங்களை எழுதி வருகிறோம். சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கடிதம் எழுதுகிறோம்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வைத்திருப்பதுபோல், தமிழக அரசு சார்பில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு பொறியாளர்களை அழைத்து, பாலம் அமைக்கலாம். உலக வங்கி கடனுதவி பெற்றும் செய்யலாம். அதனால்தான் ஆணையம் அமைத்துள்ளோம்.
முதற்கட்டமாக, அதிகமான நெரிசல் உள்ள, சென்னை – மாமல்லபுரம் சாலையில், திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை, ஆறு வழிச்சாலையாக மேம்பாலம் அமைக்க, ஆய்வு நடந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, இது செயல்படுத்தப்பட உள்ளது.
வி.சி., – எஸ்.எஸ்.பாலாஜி: மாம்பாக்கம் – செம்பாக்கம் சாலையை அகலப்படுத்த வேண்டும். மாம்பாக்கத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். வனத்துறை அனுமதி
இல்லை என, 10 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் இருந்த சாலையை அமைத்துள்ளீர்கள்; அதற்கு நன்றி.
அமைச்சர் வேலு: மேடவாக்கம் – மாம்பாக்கம் சாலையில், மாநகராட்சி பகுதியில், 8 கி.மீ., உள்ளது. இது நான்கு வழிச்சாலையாக உள்ளது. மீதமுள்ள, 19 கி.மீ., இருவழிச் சாலையாக உள்ளது. வனத்துறையிடம் அனுமதி பெற்று, சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து செறிவு அடிப்படையில், நான்கு வழிச் சாலையாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் பாலம் அமைக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
வுநீர் குழாய்கள் மாற்றப்படும்’
”சென்னையில், பழமையான குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தாயகம் கவி – தி.மு.க., – திரு.வி.க.நகர் தொகுதி: என் தொகுதியில், 74வது வார்டு, சுப்பராயன் முதல் தெருவில், கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். அதே வார்டில், பரக்கா சாலை முதல் தெரு, இரண்டாவது தெரு, ஒத்தவாடை தெரு, பாபு தெரு, போன்ற இடங்களில், 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட கழிவுநீர் குழாய்களை சீரமைத்து தர வேண்டும்.அமைச்சர் நேரு: சுப்பராயன் தெரு கழிவுநீர், நம்மாழ்வார்பேட்டை கழிவுநீர் அகற்று நிலையத்தில் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. கழிவுநீர் குழாய்களில், சுழற்சி முறையில் கசடு அகற்றப்பட்டு, தற்போது தெருவில் கழிவுநீர் வழிந்தோடுவதில்லை. திரு.வி.க., நகர் சட்டசபை தொகுதியில், 245 தெருக்களில் பழமையான கழிவுநீர் குழாய்களை அகற்றி, புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 284 தெருக்களில் உள்ள, பழமையான குடிநீர் குழாய்களை மாற்றி, புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி
துவக்கப்பட உள்ளது.இதற்காக, 30 கழிவுநீர் உந்து நிலையங்களில், 22 நிலையங்களில் பழைய பம்புகளை மாற்றி, புதிய பம்புகள் மேம்படுத்த பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. ஆண்டு இறுதிக்குள் பணி முடிக்கப்படும்.தாயகம் கவி: அமைச்சருக்கு நன்றி. துாய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்கும் பணி கூடுதலாக்கப்படுமா?நேரு: தற்போது, ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஏற்கனவே உள்ளவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. துாய்மைப் பணியாளர்களில், 213 பேருக்கு நவீன கழிவு நீரகற்றும் இயந்திரம் வழங்கி, தொழில் முனைவோர் ஆக்கப்பட்டு உள்ளனர். இதற்காக ஏழு ஆண்டுகளில், 500 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.