பெண் பொறியாளர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தொடக்கத்திலிருந்தே வேலைவாய்ப்பில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உள்ளமைப்பு பணியாளர்களில் 21 சதவீத பெண்களும், வெளி ஒப்பந்த பணியாளர்களில் 50 சதவீத பெண்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கையரையும் பணியமர்த்தியுள்ளது. 2வது கட்டத்தில் முழுமையாக பெண்களால் மட்டுமே இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களை நிறுவுவதற்கான வாய்ப்புகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

பெண்களின் மாறுபட்ட கண்ணோட்டங்கள், புதுமையான கருத்துகள் மற்றும் வலுவான தலைமைத்துவ குணங்கள் மூலம் அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை மெட்ரோ ரயில் நிறுவனம் அங்கீகரிக்கிறது. இதன் மூலம் முடிவெடுக்கும் செயல்முறைகள் மேலும் வளமாகி இன்னும் வலிமையான மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட வேலை சூழலை வளர்க்கிறது. தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, மெட்ரோ ரயில் நிறுவனம், தகுதியும் அனுபவமும் வாய்ந்த பெண் பொறியாளர்களுக்கான எட்டு உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த முயற்சி, பொறியியல் பணியாளர்களிடையே பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை காட்டுகிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் பாதுகாப்பான சூழலை வளர்ப்பது முக்கியமானது, மற்றும் பொறியியல் துறையில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களது வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் முழுமையாக கடமைபட்டுள்ளன.

இந்த சிறப்பு மற்றும் பிரத்யேகமான பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை, எங்கள் பாலின சமத்துவ இலக்குகளை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

* பதவி: உதவி மேலாளர் (சிவில்)
* பணியிடங்களின் எண்ணிக்கை: 8
* குறைந்தபட்ச அனுபவம்: 2 வருடங்கள்
* அதிகபட்ச வயது: 30 வருடங்கள் (தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)
* ஊதியம்: மாதம் ரூ.62,000
* தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் பரிசீலனை செய்யப்படும்.
* விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதி 10.2.2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *