எம் ஜி எம் மருத்துவமனை தகவல் : 86 வயது மூதாட்டிக்கு ஏஐ உதவியுடன் வயர்லெஸ் பேஸ் மேக்கர் பொருத்தம்
சென்னை: சென்னையில் வசிக்கும் 86 வயதுள்ள மூதாட்டிக்கு, முன்பு பொருத்தப்பட்டிருந்த பேஸ்மேக்கரிலிருந்து நரம்புகளில் அடைப்புகள் உட்பட பல சிக்கல்களை இந்நோயாளி எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், இந்த புதிய பேஸ்மேக்கர் பொருத்த வேண்டியிருந்தது. இந்த கருவி, இதயத்தின் வலது கீழறைக்குள் நேரடியாக உட்பதியம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, தொற்றுகளுக்கான இடர்வாய்ப்பு மற்றும் பிற சிக்கல்களுக்கான வாய்ப்புகள் கணிசமாக குறைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக இதய மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் ரவிக்குமார் கூறியதாவது: 2.4 கிராம் எடை கொண்ட பேஸ்மேக்கர் 17 ஆண்டுகள் செயல்படும். காந்தப்புலம் இல்லாத வடிவமைப்பின் காரணமாக, விமான நிலைய ஸ்கேனர்கள், எம்ஆர்ஐ சாதனங்கள் மற்றும் அதிக வோல்டேஜ் உள்ள மின்சாரம் ஆகியவற்றிற்கு இணக்க நிலையில் இருக்கும்.
இதயத்தின் தாளலயத்தை ஒழுங்குமுறைப்படுத்த துல்லியமான மின்சார துடிப்புகளை வழங்குவதன் மூலம் குறைவான இதயத்துடிப்புள்ள நோயாளிகளுக்கு மேம்பட்ட வாழ்க்கைத்தரம் கிடைப்பதை இது உறுதி செய்கிறது. சிரம்மற்ற உட்பதிய பொருத்தம் மற்றும் வெளியே எடுக்கும் செயல்முறையை இது வழங்குவதால், ரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள் அல்லது குறைவான நோய் எதிர்ப்பு திறனுள்ள நபர்கள் போன்ற நோயாளிகளுக்கு இது மிகவும் உகந்ததாகும்.இவ்வாறு அவர் கூறினார்.