ஏலத்திற்கு வந்த உண்டியல் ‘ஐபோன் ‘ ரூ.10,000 கொடுத்து மீட்ட உரிமையாளர்
சென்னை:பெரம்பூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா, குடிநீர் வாரிய அலுவலகம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடைபயணம் மேற்கொண்டபடி, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பகுதிவாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, கோவில் உண்டியலில் விழுந்த ஐபோன் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கடந்த ஆகஸ்ட் மாதம் அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ், தன் ‘ஐபோன் 13 புரோ’ ரக மொபைல் போன், தவறுதலாக உண்டியலில் போட்டுள்ளார். அதன் பின், கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல்போனை திரும்பக் கேட்டுள்ளார்.
அறநிலையத்துறை சட்டத்தின்படி ஆய்வு செய்து, உண்டியலுக்கு வரும் பணத்தை தவிர தங்கம், வெள்ளியாக இருந்தாலும் அவற்றை கோவில் கணக்கில் வரவு வைத்து, அதை ஏலத்தில் விடுவது நடைமுறையாகும்.
அந்த வகையில், உண்டியலில் விழுந்த மொபைல்போனை, இரு தினங்களுக்கு முன் ஏலத்தில் விட்டோம். அதை மொபைல் போனின் உரிமையாளர் தினேஷ், 10,000 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, சென்னை மேயர் பிரியா மற்றும் பல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.