குவைத் -சென்னை விமானத்தில் பயணிய ர் ‘லக்கேஜ்கள் ‘ மாயம்
சென்னை:குவைத்தில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கடந்த திங்கட்கிழமை 176 பயணியருடன் சென்னை வந்தது. அதில் இருந்தவர்கள் குடியுரிமை சோதனைகளை முடித்து, உடைமைகளை எடுப்பதற்காக கன்வேயர் பெல்ட் பகுதியில் காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் 80க்கும் மேற்பட்ட பயணியரின் உடைமைகள் வரவில்லை.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் சம்மந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் விசாரித்த போது, குவைத் விமான நிலையத்திலேயே உடைமைகள் இருந்தது தெரியவந்தது. ‘விடுபட்ட உடைமைகள், பயணியரின் வீட்டு முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்படும்’ என, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவன அதிகாரிகள் அளித்த விளக்கம்:
குவைத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ‘பே லோடு’எனும் உடைமைகளின் எடை அதிகமாக இருந்ததால், விமானத்தில் ஏற்றி வர முடியாமல் போனது. விடுப்பட்ட பயணியரின் உடைமைகள், அவர்களின் முகவரிக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் கொண்டு சேர்க்கப்படும். இதற்கான முழு செலவையும், எங்கள் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். இந்த சம்பவத்திற்கு வருந்துகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.