கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 24 மணி நேரம் இயக்க நடவடிக்கை லாரிகளுக்கு வருகிறது கடிவாளம்
சோழிங்கநல்லுார்:தென்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி., நிறுவனங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
இங்கு, கழிவு நீர் திட்ட பணிகள் முழுமை அடையாததால், கழிவு நீர் லாரிகளை நம்பியே உள்ளனர். இதற்காக, பெருங்குடியில் 12.60 கோடி லிட்டர் மற்றும் சோழிங்கநல்லுாரில் 3.60 கோடி லிட்டர் கொள்ளளவில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
கழிவு நீர் லாரிகள், 6,000, 9,000, 12,000 லிட்டர் கொள்ளளவில் உள்ளன. சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் கொட்ட, ஒரு லாரிக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சில லாரி உரிமையாளர்கள், கட்டட உரிமையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்துவிட்டு, லாரி கழிவுநீரை நீர்நிலைகள், வடிகால், கால்வாய் மற்றும் திறந்தவெளி காலி இடங்களில் கொட்டி வருகின்றனர்.
இதனால், நிலத்தடி நீர் மாசடைவதாக புகார்கள் அதிகரித்தன; இரண்டு மாதங்களில், 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவு நீர் கொட்ட, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது; இரவில் அனுமதி இல்லை. இதை காரணம் காட்டி, விடுதிகள், ஹோட்டல்கள், ஐ.டி., நிறுவனங்களில் இருந்து, இரவில் கழிவுநீரை ஏற்றி வெளியில் கொட்டி வந்தனர்.
இந்நிலையில், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
லாரி உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்றுத் தான், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், ஊழியர்கள் நியமித்து, கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளோம்.
இதை பயன்படுத்தாமல், வெளியில் கழிவுநீர் கொட்டும் லாரிகளை மீட்க முடியாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை உணர்ந்து, லாரி உரிமையாளர்கள் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையங்களில் கொட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.