51 பட்டாக்கத்திகள் பறிமுதல் சதி திட்டம் தீட்டி பதுங்கிய 7 பேர் கைது
வியாசர்பாடி:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் 28 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், தப்பி செல்ல முயன்ற ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா, சமீபத்தில் கைது செய்யப்பட்டு என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்ற 26 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராக் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது சகோதரரான வியாசர்பாடி, எஸ்.எம்.நகர், 17வது பிளாக்கில் வசிக்கும் ரமேஷ், 44, என்பவரது வீட்டில், நேற்று தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் சதி திட்டத்துடன் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களது வீட்டில் இருந்து, 51 பட்டாக்கத்திகள் மற்றும் இரண்டு இரும்பு ராடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, நாகேந்திரனின் சகோதரர்கள் முருகன், 45, ரமேஷ் மற்றும் சகோதரி மகன்களான வியாசர்பாடியைச் சேர்ந்த தம்பிதுரை, 40, தமிழகன், 39, கிேஷார், 30, சுகுமார், 29, தனுஷ், 28, ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். இதில், பழைய குற்றவாளியான ரவுடி முருகன் மீது 43 வழக்குகள் உள்ளன. கிேஷார், தனுஷ் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. ஏழு பேரையும் கைது செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.