பணிகள் முடிந்தும் திறக்கப்படாத பூங்கா

நெற்குன்றம்:வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 145வது வார்டில், விளையாட்டு திடல், பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் வார்டில் இல்லை என, பகுதிவாசிகள் புகார் கூறி வந்தனர்.

இதையடுத்து, நெற்குன்றம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே, பெருமாள் கோவில் தெருவில், 49 லட்சம் ரூபாய் மதிப்பில், வார்டின் முதல் பூங்கா அமைக்கும் பணி, கடந்த ஆண்டு ஜூலையில் துவங்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன் முடிக்கப்பட்டது.

கபடி களம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, நடைபாதை என, பல வசதிகளுடன் உருவாகியுள்ளது.

ஆனால் இப்பூங்கா, முதல்வர் நாளுக்காக, நான்கு மாதங்களாக காத்திருக்கிறது. எனவே, வரும் பொங்கலுக்கு முன் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *