பள்ளி வளாகத்தில் கஞ்சா அமைச்சர், மேயரிடம் புகார்
பெரியார் நகர், சென்னை மேயர் பிரியா தலைமையில், அமைச்சர் சேகர் பாபு மற்றும் அதிகாரிகள் திரு.வி.க., நகர் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பெரியார் நகரில், குடிநீரில், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால், தண்ணீரை குடிக்க முடியாமல் அவதியடைவதாகவும், இரவு நேரங்களில் சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தினுள் நுழையும் மர்ம நபர்கள், கஞ்சா புகைப்பதாகவும், மது குடிப்பதாகவும், அப்பகுதியினர் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோரை முற்றுகையிட்டனர்.
‘இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தாலும், அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை’ என்றும், ‘குப்பைகளை அள்ளுவதில்லை; பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை எடுப்பதில்லை’ என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பின், செய்தியாளர்களை சந்தித்த, அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
மக்களோடு ஒன்றிணைந்து இருக்கக்கூடிய இயக்கம் தி.மு.க., கால் படாத சாலைகளே இல்லை என்ற வகையில் பயணிப்பவர் தமிழக முதல்வர். எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும், திறந்த புத்தகமாக இருக்கக்கூடிய தி.மு.க.,வும், அரசும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்