மாநகராட்சி அதிகாரி மீது முறைகேடு புகார்
திருவொற்றியூர், திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூரில், கோழி, ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் சரத்ராஜன். இவர், திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
அதன் விபரம்:
நான், கடந்த ஐந்து ஆண்டுகளாக எர்ணாவூரில் இறைச்சி வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த, டிச., 21ம் தேதி, மாநகராட்சி உரிமம் ஆய்வாளர் வீரமுனிநாதன் என்பவர், கடை உரிமம் காலாவதியாகி விட்டதாக கூறினார்.
இதையடுத்து, டிச., 30ம் தேதி, கோழி இறைச்சி விற்பனைக்கு, 6,000 ரூபாய், ஆட்டிறைச்சிக்கு 6,000 ரூபாய், தவிர, 1,000 ரூபாய் என, 13,000 ரூபாயை அவருடைய ‘ஜிபே’ கணக்கிற்கு அனுப்பினேன்.
பின், என் கடை உரிமம் மார்ச், 31 வரை இருப்பது தெரிய வந்த நிலையில், வருவாய் பிரிவு அதிகாரியிடம் முறையிட்டேன். அவர்கள், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வருவாய் உதவி அலுவலர் அர்ஜுனன் கூறுகையில், ”சம்பந்தப்பட்ட அதிகாரி, மாற்று அலுவல் பணியில் உள்ளார். இருவரிடமும் விசாரித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்,” என்றார்.