முருகனுக்கு பெயர்கள் பிறந்த கதை பரதத்தில் அபி நயித்த கலைஞர்கள்

கடவுள் வாழ்த்து பாடலுடன், நாரத கான சபாவில், பரத கலைஞர்களான சபீக்குதீன் – ஷபானாவின் நடன நிகழ்ச்சி நடந்தது.

சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த மகன், வள்ளி, தெய்வானை எனும் இரு கன்னியரை மணந்தவன். தணிகை மலையிலே வாழும் அழகான மயிலின் மீது அமர்ந்து பவனி வருபவனான வேலனை காண்போம் வாரீர் என, நடனத்தில் முருகனை வரவழைத்தனர்.

இந்திரன் முதலான தேவர்களை சிறைபிடித்த சூரபத்மனை அழிக்க சிவனின் நெற்றிக்கண்ணில் பிறந்து, ஆறு தாமரை மலர்களில் ஏந்தி, ஆறு குழந்தைகளாய் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்த கார்த்திகேயனின் கதையை, இருவரும் வெளிப்படுத்தினர்.

அன்னை பராசக்தி அருளால் ஆறுமுகம் ஆனதை, பேரழகான அவனை காண கண் கோடி வேண்டும் என்ற வகையில் அமைந்த அனுபல்லவியின் முதல் வரியில் அசரடித்தனர். ஆறுமுகன், அன்னையிடம் வேல் வாங்கி, சூரபத்மனை இரண்டாக பிளந்து, தேவர்களை காத்து, தேவ சேனாவதி எனும் பெயர் பெற்றதை இரண்டாம் வரியிலும், விறுவிறுப்பாக்கினர்.

மயில் மீதேறி உலகத்தை வலம் வந்தும் வேலனுக்கு பழம் கிடைக்காததால், ‘என் நாடு என் மக்கள்; எனக்கு நிகரில்லை’ என, அவன் சொன்னதை முத்தாய்ஸ்வரத்திலும் கூறி, நம்மை பழனிநாதனை தரிசிக்க வைத்தனர்.

சரணத்தில் ஸ்வரங்களுக்கு அடவுகள் கோர்த்தனரா, இல்லை வேலவனுக்கு மாலைகள் கோர்த்தனரா என வியக்கும் அளவிற்கு அடவுகளும், அங்க சுத்தமும், சலங்கை ஒலிகளும் அமைந்திருந்தன. இன்னும் இன்னும் வேலவனின் அருள் லீலைகளை பார்க்க வேண்டும் என்ற ஆவலை துாண்டின.

முருகனுக்கு பல பெயர் அமைந்த கதையை எளிதாகவும், அழகாகவும் வெளிப்படுத்திய சபீக்குதீன் – ஷபானாவின் நடனம், கனவிலும், நனவிலும்கூட மறக்க முடியாத வகையில் இருந்தது.

– திருநங்கை தி.ராஜகுமாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *