திரு. வி. க. நகர், எழும்பூர் தொகுதிகளில் பொதுமக்களிடம் குறைகேட்பு: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
சென்னை: திரு.வி.க. நகர், எழும்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களிடம், வீதி வீதியாக சென்று குறைகளை தீர்க்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். சென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 44 மாநகராட்சி வார்டுகளில் உள்ள 83 வட்டங்களிலும், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் தேவைகளை கண்டறிந்து குறைகளை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பயணத்தின் 5வது நாளான நேற்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி, 6வது மண்டலம், 76வது வார்டு, ஓட்டேரி, செல்லப்பா முதலி தெருவில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மாநகராட்சி பட்டேல் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பூங்காவை உடனடியாக மேம்படுத்தி தருமாறும், அவ்விடத்திலுள்ள கட்டிட கழிவுகளை உடனடியாக அகற்றிடுமாறும் மாநகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து, எழும்பூர் சட்டமன்ற தொகுதி, 78வது வார்டு, சூளை, சுப்பா நாயுடு சாலையில் வசிக்கும் பொதுமக்களிடம் தேவைகளை கண்டறிந்து, கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின்போது, மேயர் பிரியா, மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன், செயற்பொறியாளர் சரவணன், மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினர் சோ.வேலு, மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வி சசிகுமார், உள்ளாட்சி பிரிதிநிதிகள் சசிகுமார், பாலு, மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரிய அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.