பெருங்குடி குப்பை கிடங்கில் 96 ஏக்கர் நிலம் மீட்பு
சென்னை: உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டம் மூலம் பெருங்குடி குப்பை கிடங்கில் 96 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது, என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிலுள்ள 18 மாநகராட்சிகள் மற்றும் 93 நகராட்சிகளில் உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டங்களை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக குவிந்துள்ள குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு அப்பகுதிகள் பூங்காக்களாகவும், பசுமை பகுதிகளாகவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் மலை போல் குவிந்த குப்பை கழிவுகளை, உயிரி அகழ்ந்தெடுக்கும் முறையில், தரம் பிரித்து அகற்றும் செயல்முறை மூலம் 96 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.