வெளிநாட்டு எலக்ரானிக் பொருட்கள் வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
கொடுங்கையூர்:கொடுங்கையூர், சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்தவர் செந்தில், 42. இவர், பர்மா பஜாரில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார்.
இவரது நண்பரான முகைதீன் அப்துல்காதர் என்பவர், வெளிநாட்டு எலக்ரானிக் பொருட்களை, குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதை உண்மையென நம்பிய செந்தில், கடந்த 2023, ஆக., 11ம் தேதி, முகைதீன் அப்துல்காதருக்கு நேரடியாகவும், ஜிபே வாயிலாகவும், 38 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட முகைதீன் அப்துல்காதர், வெளிநாட்டு எலக்ரானிக் பொருட்களை வாங்கி தராததோடு, பணத்தை தராமல் ஓராண்டாக செந்திலை ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணை நடத்தினர்.
அதில், மின்ட், காட்பாடாவை சேர்ந்த முகைதீன் அப்துல்காதர், 43, அவரது மனைவி உஸ்னாராபேகம், 38, அவரது மைத்துனர் ஏஜாஸ், 37, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
அவர்கள், பணத்தை திருப்பி கேட்ட செந்திலுக்கு, கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மூவரையும் கைது செய்தனர்.