அற்புத குழந்தை இயேசு சர்ச் திருத்தேர் பவனி கோலாகலம்
மணலிபுதுநகர்:மணலிபுதுநகர், அற்புத குழந்தை இயேசு சர்ச் பிரசித்தி பெற்றது. குழந்தை வரம் வேண்டி இங்கு வருவோர் ஏராளம். இந்த சர்ச்சில், ஆண்டு பெருவிழா கோலாகலமாக நடக்கும்.
அதன்படி, 45ம் ஆண்டு பெருவிழா, டிச., 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பது நாட்கள் நடக்கும் திருவிழாவில், முக்கிய நிகழ்வான ஆண்டின் முதல் வியாழன் சிறப்பு திருப்பலி நாள் முழுவதும் நடந்தது.
மற்றொரு முக்கிய நிகழ்வான, திருத்தேர் பவனி, நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முன்னதாக, அம்பத்துார் புனித சூசையப்பர் சர்ச் பங்குதந்தை ஜேக்கப் தலைமையில், ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இயேசுவின் உயிர்ப்பில் இணைய’ என்ற தலைப்பில் சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், மேரி மாதா, குழந்தை இயேசு உள்ளிட்டோர் எழுந்தருளினர். தொடர்ச்சியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணிவகுக்க, திருத்தேர் பவனி நடைபெற்றது.
சாதி, மதம், பேதம் பார்க்காமல், ஹிந்து, இஸ்லாமிய மக்களும், வண்ண மலர் துாவியும், வாண வேடிக்கை நிகழ்த்தியும், குளிர்பானம், அன்னதானம் வழங்கி, திருத்தேர் பவனியில் பங்கேற்றனர். நேற்று மாலையில், கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுற்றது.
பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை, பங்குதந்தை தங்ககுமார் உள்ளிட்ட பங்கு பேரவை மக்கள் செய்திருந்தனர்.