செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பள்ளிகளில் இடைநிற்றல் மாணவர்கள் அதிகரிப்பு
செம்மஞ்சேரி:செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள எட்டு அரசு பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்
இதில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச்சேர்ந்த பல மாணவர்கள்,தேர்வு பயத்தில், ஜன., – பிப்., – மார்ச் மாதங்களில், பள்ளிக்கு செல்வதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில், 400க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, தேர்வு எழுத வைக்க, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு, கூடுதல் கவனம் செலுத்தி, மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பெற்றோர் கண்காணிப்பு இல்லாத, மாதாந்திர தேர்வுகளில் தோல்வியடையும் பல மாணவர்கள், இறுதியாண்டு தேர்வுக்கு முன் படிப்பை விட்டுவிடுகின்றனர்.
குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்வோரும் உண்டு. ஆடம்பர செலவுக்கு தவறான வழிக்கு செல்லும் மாணவர்களும் உள்ளனர்.
இதனால், இடைநிற்றல் மாணவ – மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதை தடுக்க, பள்ளி நிர்வாகம், சமுதாய வளர்ச்சி பிரிவு, காவல் துறை இணைந்து செயல்பட வேண்டும்.
பள்ளியிலும் மனவளம், உடல்நலன் சார்ந்த ஆரோக்கிய பயிற்சிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் படிப்பு குறித்து பள்ளி வந்து விசாரிப்பதில்லை. அவர்கள், வேலைக்கு செல்வதால், அவர்களை வீட்டில் பார்ப்பதும் அரிதாகிறது’ என்றனர்.
துாய்மை பணி செய்கிறேன். நாங்கள், 5ம் வகுப்பை தாண்டவில்லை. பிள்ளைகளை பட்டதாரிகள் ஆக்கி, நல்ல வேலையில் அமர்த்த ஆசைப்படுகிறோம். படிப்பு குறித்து மாதந்தோறும் பள்ளி சென்று விசாரிப்பேன். பிள்ளைகளிடமும் என்ன படிக்க ஆசை என கேட்டு, அதை ஆசிரியர்களிடம் கூறி, மேல் படிப்புக்கான ஆலோசனை பெறுவேன். படிப்பை தவிர, அவர்களிடம் குடும்ப பாரத்தை ஏற்க வைப்பதில்லை.
– காமாட்சி, 35, பெரும்பாக்கம்.