போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர் அமைப்பினருக்கு ஜாமீன் அரசு பொது மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்ற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போராட்டம் நடத்திய ஏபிவிபி மாணவர் அமைப்பினர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜவின் ஏபிவிபி மாணவர் அமைப்பை சேர்ந்த யுவராஜ், ஸ்ரீதரன் ஆகியோர் கடந்த டிசம்பர் 26ம் தேதி சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பி உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்த உருவ பொம்மை மற்றும் பெட்ரோல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். பின்னர், சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீ அல்லது எரியக் கூடிய பொருள்களை எடுத்து வருவது உள்ளிட்ட பிரிவுகளில் யுவராஜ், ஸ்ரீதரன் ஆகியோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில், அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பி, உருவ பொம்மை எரிக்க பெட்ரோல் எடுத்து வந்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர்களை கைது செய்திருப்பதாகவும், விசாரணை நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதி, ஏபிவிபி மாணவர்கள், வரும் பிப்ரவரி 4ம் தேதி வரை கல்லூரி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி, அது தொடர்பான அனுபவங்களை தங்கள் கைப்பட எழுதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.