கொல்லம் விரைவு ரயில்.. .விபத்தில் இருந்து தப்பியது! தண்டவாளத்தில் 5 அடி நீள இரும்புத்துண்டு
கூடுவாஞ்சேரி :தண்டவாளத்தில் கிடந்த 5 அடி நீள இரும்பு ராடால், விபத்தில் சிக்கஇருந்த கொல்லம் விரைவு ரயில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பியது. வண்டலுார் அருகே தண்டவாளத்தில் இரும்பு ராடு கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், கொல்லத்தில் நேற்று முன்தினம் புறப்பட்ட விரைவு ரயில், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதிகாலை 2:00 மணிக்கு, செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே தண்டவாளத்தில் இருந்து திடீரென பலத்த சத்தம் எழுந்துள்ளது.
இதை கவனித்த ரயில் இன்ஜின் டிரைவர், எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தி நிறுத்தினார்.
தொடர்ந்து, மெதுவாக பயணித்த ரயில், வண்டலுார் ரயில் நிலையம் நடைமேடை இரண்டில் நின்றது.
அவர் இறங்கி பார்த்தபோது, தண்டவாளத்தில் 5 அடி நீள இரும்பு ராடு, ரயில் சக்கரங்களில் சிக்கியிருந்தது தெரிந்தது.
இதையடுத்து டிரைவர் கொடுத்த புகாரின்படி, வண்டலுார் ரயில் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து, ஆய்வு செய்தனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின், தாம்பரத்தில் இருந்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் வந்து சோதனை மேற்கொண்டனர்.
தண்டவாளத்தில் கிடந்த 5 அடி நீள இரும்பு ராடு அகற்றப்பட்டது. அதன் எடை 100 கிலோவுக்கு மேல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், கொல்லம் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக சென்றது.
கொல்லம் ரயில் பயணியர் கூறியதாவது:
டிரைவர் சுதாரிக்காமல் இருந்திருந்தால், பெரும் விபத்து நடந்து, உயிர் பலி ஏற்பட்டிருக்கும். பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், கவனக்குறைவாக இருந்ததாலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
வண்டலுார் ரயில் நிலையத்தில், சில நாட்களாக பராமரிப்பு பணி நடந்து வருகிறது. பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு பொருட்களை, பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கவனக்குறைவாக விட்டுச் சென்றுள்ளனர்.
இருந்த போதிலும், ரயில் இன்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால், விபத்து தவிர்க்கப்பட்டது. இரும்பு பொருளை கவனக்குறைவாக விட்டு சென்ற ஊழியர் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.