சென்னைக்கு ‘ஏசி’ மின்சார ரயில்; ஐ.சி.எப்.,பில் தயாரிப்பு துவக்கம்
சென்னை: சென்னையில் முதல், ‘ஏசி’ மின்சார ரயில் இயக்கும் வகையில், ஐ.சி.எப்., ஆலையில் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
சென்னை கடற்கரை — செங்கல்பட்டு தடத்தில், விரைவு பாதையில், ‘ஏசி’ மின்சார ரயில் இயக்கலாம் என, 2019ம் ஆண்டில், ரயில்வே வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே பரிந்துரைத்தது. ஐந்து ஆண்டுகளாகியும், இந்த திட்டத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், சென்னை ரயில் கோட்டத்துக்கு இரண்டு, ‘ஏசி’ மின்சார ரயில்களை தயாரிக்க, ரயில்வே வாரியம், ஐ.சி.எப்.,க்கு சமீபத்தில் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து, மின்சார ‘ஏசி’ ரயில் தயாரிப்பு பணிகளை ஐ.சி.எப்., துவங்கியுள்ளது.
சென்னை ஐ.சி.எப்., ஆலையில் காலத்திற்கு ஏற்றார்போல் புது வகையான ரயில்கள், ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு, 12 பெட்டிகள் கொண்ட புதுவகை, ‘ஏசி’ மின்சார ரயில், 2018ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் தற்போது, ‘ஏசி’ மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள், அதிகபட்சமாக மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை. இதில், தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ்., அடிப்படையிலான தகவல் பெறும் வசதிகள் உள்ளன.
அனைத்து ரயில் பெட்டிகளிலும், ‘சிசிடிவி’ கேமராக்கள் இருக்கும்.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் இயக்குவதற்காக, இரண்டு, ‘ஏசி’ மின்சார ரயில் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது. முதல் ரயிலை இரண்டு மாதங்களில் தயாரித்து வழங்குவோம். மற்றொரு ரயில் ஏப்ரலில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.