வர்த்தக நிறுவன ஊழியர் வீட்டில் 150 சவரன், ரூ.20 லட்சம் கொள்ளை
சென்னை, வர்த்தக நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, 150 சவரன் நகை, 20 லட்சம் ரொக்கம், 4 ரோலக்ஸ் வாட்ச் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நுங்கம்பாக்கம், ஏரிக்கரை, ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் ஹாருண், 34. அவர், துபாயில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
சென்னை வந்துள்ள இவர், கடந்த டிச, 21ல், குடும்பத்துடன் ராமநாதபுரம் கீழக்கரைக்கு சென்றார். நேற்று காலை, 8:30 மணியளவில் சென்னை திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 150 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய், 4 ரோலக்ஸ் வாட்ச் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
தடயவியல் நிபுணர்கள்சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். சிக்கியுள்ள கைரேகைகள், பழைய குற்றவாளிகளுடன் ஒத்துப் போகிறதா எனவும், கண்காணிப்பு கேமராவில் பதிவுகள் ஏதும் உள்ளதா எனவும், நுங்கம்பாக்கம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மூன்று தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.