ஓபன் கிராண்ட் மாஸ்டர் தமிழக வீரர்கள் முன்னிலை
சென்னை,தமிழ்நாடு சதுரங்க கழகம் மற்றும் சக்தி குரூப் இணைந்து, மகாலிங்கம் கோப்பைக்கான 15வது சென்னை ஓபன் இன்டர்நேஷனல் கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி — 2024, எழும்பூரில் நடக்கிறது.
போட்டியில், ‘ஏ’ பிரிவில் 2,000 ரேட்டிங் மேல்; ‘பி’ பிரிவில் அதற்கு குறைவானோர்; ‘சி’ பிரிவில், 1,800 ரேட்டிங் குறைவானோர் பங்கேற்றுள்ளனர்.
இதில், 22 நாடுகளைச் சேர்ந்த 17 கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 27 வெளிநாட்டு வீரர்கள் உட்பட, 400க்கும் மேற்பட்டோர் விளையாடுகின்றனர்.
பிரதான போட்டியான ‘ஏ’ பிரிவில் மட்டும், 150க்கும் மேற்பட்டோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் மொத்தம், 10 சுற்றுகளாக ‘சுவிஸ்’ அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று காலை நடந்த ‘ஏ’ பிரிவின் 2வது சுற்றில், ரயில்வே வீரர் ஆரோனயக் கோஷ், ஆந்திராவின் ஆதித்யா வருணையும், தமிழக வீரர் பாரதி கல்யாண், சிங்கப்பூர் வீரர் சித்தார்த்தையும் வீழ்த்தினர்.
தமிழக வீரர் இனியன், ஆந்திரவின் சாய் பவத்தையும், மற்றொரு தமிழக வீரர் சர்வேஸ்வரன், மேற்கு வங்கத்தின் சயந்தனையும் தோற்கடித்தனர். தமிழக வீரர் தீபன் சக்கரவர்த்தி, குஜராத்தின் அனடாகட் கர்தவாயாவையும் வீழ்த்தி வெற்றி பெற்றார். போட்டிகள் தொடர்ந்து, எழும்பூர் மற்றும் நேரு விளையாட்டு அரங்கிலும் நடக்கின்றன.