அண்ணா பல்கலை விவகாரத்தை மீண்டும் மீண்டும் பேசுவதால் பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலத்தை சீர்குலைக்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
பெரம்பூர்: சென்னை ஷெனாய் நகரில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டுத் திடலை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சிக்கு குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாநகர் மேற்கு வி.ஆர்.மால் அருகிலுள்ள சுமார் 4.50 ஏக்கர் ஒஎஸ்ஆர் இடத்தை சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே ரூ.53 கோடியில் கட்டப்பட்டு வரும் வண்ண மீன்கள் வர்த்தக மையம் மற்றும் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கொளத்தூர் சிறு விளையாட்டு அரங்கத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 192 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.2000 கோடி செலவில் பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த அனைத்து பணிகளும் முடிவடைந்து 2025க்கு பெரும்பாலான திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். வடசென்னையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான நிவாரணம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் இந்த அரசு எள்ளளவும் பின்வாங்கவில்லை.
தங்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் நினைத்துப் பார்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் இந்த பிரச்னையை எழுப்புபவர்கள், பாதிக்கப்பட்ட மாணவியின் வருங்காலத்தை குலைக்க நினைக்கின்றனர். அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவராத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
திமுக ஆட்சியை நீதி தவறாத, பெண்களுக்கு முழு பாதுகாப்புள்ள ஆட்சியாக கருதுகிறார்கள். அவர்களுக்கு 2026ல் தகுந்த பதிலடியை மக்கள் வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.மோகன், வெற்றி அழகன், மேயர் பிரியா, மாநகராட்சி நிலைக்குழு (பணிகள்) குழு தலைவர் நே.சிற்றரசு மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.