தாம்பரம் மாநகராட்சியில் கடந்த 3 நாட்களில் 15 பேர் மாடு முட்டியதால் படுகாயம்: சிசிடிவி காட்சி வைரல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 47வது வார்டு, கிழக்கு தாம்பரம், மதுரகவி தெருவை சேர்ந்தவர் ஜானகி (60). அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர், தினசரி வேலைக்கு செல்வதற்கு முன், அருகில் உள்ள கோயிலை சுத்தம் செய்வது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை கோயிலை சுத்தம் செய்ய வந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென அவர் மீது வேகமாக மோதி கீழே தள்ளியது.

இதில் கீழே விழுந்த ஜானகி, அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த சோமு வீரப்பன் (70) என்பவர், அருகில் இருந்த சிறிய குச்சி எடுத்து மாட்டை துரத்த முயற்சி செய்தார். அப்போது அவரையும் மாடு பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை அந்த மாடு மீண்டும், மீண்டும் முட்டி கீழே தள்ளியது. பின்னர் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், அங்கிருந்து மாட்டை துரத்தினர். மாடு முட்டியதில் ஜானகிக்கு கையில் எலும்பு முறிவும், சோமு வீரப்பனுக்கு தலையில் காயமும் ஏற்பட்டது.

இதேபோல், 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (60), என்பவரையும் மாடு முட்டி கீழே தள்ளியதில் அவருக்கு கால் முடிவு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், கடந்த 3 நாட்களில் சுமார் 15க்கும் மேற்பட்டோரை மாடு முட்டி கீழே தள்ளியதில் அனைவரும் படுகாயமடைந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்களை மாடு முட்டி கீழே தள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் விடப்படுகின்ற மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது.

தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மாடுகள் பிடிக்கப்பட்டு மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மாடுகள் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டமங்களம் ஊராட்சி மாட்டுக் கொட்டகையில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளைப் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *