தாம்பரம் மாநகராட்சியில் ஆணையர் நேரில் ஆய்வு : ரூ.48 கோடியில் திட்ட பணிகள்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆணையர் பாலச்சந்தர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, தாம்பரம் சானடோரியம் பகுதியில் ரூ.43.40 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 1வது மண்டலம்,
31வது வார்டு, திருநீர்மலை பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.1.20 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.29.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை, அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைக்கும் பணி மற்றும் அப்பகுதியில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற துணை சுகாதார நிலையத்திற்கான கட்டுமானப் பணி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் 4வது வார்டு, அனகாபுத்தூர் பகுதியில் உள்ள நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணி, கல்மடுவு பகுதியில் ரூ.1.47 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமானப் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.