திருவொற்றியூர் பேசின் சாலையில் முட்செடிகள் பன்றி , நாய்கள் குறுக்கே செல்வதால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இருந்து பேசின் சாலை வழியாக மணலி, ஐஓசி, கொருக்குப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள், குடிநீர் லாரி, கார், பைக் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் திருவொற்றியூர் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கரிமேடு தெரு வரை பேசின் சாலையோரம் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இவ்வாறு உள்ள இந்த செடிகளில் பன்றி மற்றும் நாய்கள், விஷ பாம்புகளும் சுற்றி திரிகின்றன.
இப்படி பன்றிள், நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென்று ஓடுவதால் பைக்கில் செல்பவர்கள் இதன் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாக நடந்து செல்பவர்களை நாய்கள் கடித்து குதறுகின்றன. எனவே சாலையோரம் உள்ள இந்த முட்செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை கோட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பல்வேறு காரணங்களை கூறி இரு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் பைக் மற்றும் நடந்து செல்பவர்கள் பீதியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த முட்செடிகளை அப்புறப்படுத்தி விட்டு சுற்றுச்சூழலை பாதுகாப்போம், மரக்கன்றுகளை நட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூரில் இருந்து மணலிக்கு போகக்கூடிய போக்குவரத்து சாலையின் பல இடங்களில் முட்செடிகள் ஆங்காங்கே வளர்ந்துள்ளன.
இந்த செடிகளில் கால்நடைகளும், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் சுற்றி வருவதால், வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடுகின்றனர். ஆனால் அவற்றை சரியாக பராமரிக்காததால் மரக்கன்றுகளை சுற்றி குப்பை கழிவுகள் சூழ்ந்து சுகாதாரமில்லாத நிலை இருப்பதால் மரக்கன்றுகள் பட்டுப்போய் விடுகின்றன. எனவே சாலை ஓரங்களில் வளர்ந்து கிடக்கும் முட்செடி, கொடிகளை அகற்றி மரக்கன்றுகளை நட்டு, அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.