உருப்படிகளில் பிரமாதப்படுத்திய பரத்சுந்தர்
திரண்டிருந்த கூட்டத்தை புன்னகைத்த வண்ணமாக, தியாகராஜரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான ‘ஜகதானந்த காரகா’வை பாடி, தன் கச்சேரியை தி.நகரில் துவக்கினார் பரத்சுந்தர்.
மிகவும் மங்களகரமான ராகமாகக் கருதப்படும் மற்றும் எந்தவொரு கச்சேரிக்கும் முதல் ராகமாக தேர்ந்தெடுக்கப்படும் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் பாடினார்.
‘தன்யுதேவ்வன்னோ’ என்ற பட்டணம் சுப்பிரமணிய அய்யரின் கிருதியை ராக ஆலாபனை, நிரவல் மற்றும் கற்பனை ஸ்வரங்களுடன், மலையமாருதம் ராகம், ஆதி தாளத்தில் வழங்கினார்.
பரிமள ரங்கநாதம்’ என்ற கிருதி, தேரெழுந்துார் கிராமத்தில் அமைந்துள்ள பரிமள ரெங்கநாத சுவாமி கோவிலின் வழிபாட்டைப் போற்றுவது. ஹமீத் கல்யாணி ராகம்,ரூபக தாளத்தில் அமையப்பெற்ற இக்கிருதியை ராக ஆலாப்பனையோடு வழங்கினார்.
பல்லவி, அனுபல்லவி, சரணம் என்கிற வடிவத்தை தமிழ் கீர்த்தனைகளில் அறிமுகப்படுத்தியவர், முத்துதாண்டவர். அவர் இயற்றிய ‘சேவிக்க வேண்டும் ஐயா’ என்ற கிருதியை, அந்தோலிகா ராகம், ஆதி தாளத்தில் பாடினார்.
அனைவராலும் அறியப்படும் காபி ராகத்தில், கச்சேரியின் பிரதானமான உருப்படியை தேர்வு செய்தார். தியாகராஜரால் ரெட்டைக்களை ஆதி தாளத்தில் அமைந்த ‘இந்த சவுக்யமனி’ என்ற கிருதியை ராக ஆலாசனையோடு துவங்க, சயி ரக் ஷித் தன் வயலினில் திறம்பட இசைத்து, பரத்சுந்தருக்கு பக்கபலமாகவும் இருந்தார்.
‘ஸ்வர ராக’ என்ற சரணப்பகுதியில், நிரவல், கற்பனை ஸ்வரங்கள், குறைப்பு மற்றும் கோர்வைகளை சேர்த்து அழகுற வழங்கினார். பின், பிரவீன் ஸ்பார்ஷ் அவரின் விரல்கள் தனி ஆவர்த்தன நடனம் ஆடியது.
விருத்தம் பாடி, நீலகண்ட சிவன் இயற்றிய ‘நவசித்தி பெற்றாலும் சிவ பக்தி’ எனும் கிருதியை மிஸ்ர சாபு தாளத்தில் இசைத்தார். இறுதியாக, சிவன் மீது இயற்றப்பட்ட, லால்குடி ஜெயராமின் தில்லானாக்களில் ஒன்றான பஹாடி ராகத்தில் பாடி நிறைவு செய்தார். -ரா.பிரியங்கா