ரூ.10 கோடியில் சீரமைத்தும் பயன்பாட்டிற்கு வராமல் வீணடிக்கப்படும் ராஜாஜி சாலை பாரம்பரிய கட்டடம்

பிராட்வே, சென்னை பிராட்வே, ராஜாஜி சாலையில், 1864ம் ஆண்டு பழமை வாய்ந்த பாரம்பரிய கட்டடம் உள்ளது. இந்த கட்டடம், 24,880 சதுரடியில், ‘இந்தோ — சராசனிக்’ கட்டட கலையின்படி, பிரிட்டிஷ் கட்டடக் கலை வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டது.

இந்த கட்டடத்தில், ராயபுரம் சார் பதிவாளர் அலுவலகம், வடசென்னை இணை -1 சார் பதிவாளர் அலுவலகம், உதவி பதிவு துறை தலைவர் அலுவலகம், பதிவு துறை துணை தலைவர் அலுவலகம், சீட்டு நடுவர் நீதிமன்றம் மற்றும் புதிய சார் பதிவாளர்கள் பயிற்சி மையம் ஆகியவை செயல்பட்டு வந்தன.

கடந்த 2015ல் சென்னையில் ஏற்பட்ட கனமழையால், வளாகத்தில் இருந்த பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், கட்டடம் பெருமளவு சேதமடைந்தது. அங்கிருந்த அனைத்து அரசு அலுவலகங்களும் இடம் மாற்றப்பட்டு, பாரம்பரிய கட்டடம் இழுத்து மூடப்பட்டது.

இது, 160 ஆண்டுகள் பழமையாக புராதன கட்டடம் என்பதால், இந்த பத்திர பதிவு அலுவலக கட்டடத்தை, தொல்லியல் மாறாமல் புதுப்பிக்க வேண்டுமென, அரசுக்கு தொல்லியல் துறையினர் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து, 9.70 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடத்தை புதுப்பிக்கும் பணியை, 2020ல், பொதுப் பணித்துறை துவக்கியது. ‘மெட்ராஸ் டெரஸ் ரூப், மங்களூர் டைல்ஸ் ரூப்’ ஆகியற்றுடன் கூடிய செங்கல் கூரை பகுதி, சுண்ணாம்பு பூச்சு, தேக்குமரம் உத்தரம், கதவுகள், செங்கல் துாண்களால் ஆன கட்டடம், பாரம்பரிய முறையில் பூச்சு வேலை செய்து புனரமைக்கப்பட்டது. இங்கு உயர் கோபுரம், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தேக்கு மரத்திலான படிக்கட்டுகள் அமைந்துள்ளது.

தரை மற்றும் முதல் தளத்தில், 32 தேக்கு மர கதவுகள், 80 தேக்கு மர ஜன்னல்கள் உள்ளன. செங்கல் மற்றும் சுண்ணாம்பு பூச்சு காரணமாக, கோடை காலத்திலும் கட்டடம் குளிர்ச்சியாக இருக்கும். கட்டடம் புதுப்பிக்கும் பணி, 2022ல் முடிந்தது. பணி முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், கட்டடம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் ஏற்கனவே ஆண்கள், பெண்களுக்கு என, எட்டு பொது கழிவறைகள் உள்ளன.

ஆனால், ‘பொது கழிவறைகள் நாங்கள் பயன்படுத்த முடியாது; தங்களுக்கென தனியாக கழிவறைகள் கட்டி கொடுக்க வேண்டும்’ என, சார் பதிவாளர் துறை அதிகாரிகள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதையடுத்து, 40 லட்ச ரூபாய் செலவில், சார் பதிவாளர்கள் பயன்பாட்டிற்காக தனியாக, தரை மற்றும் மேல்தளத்தில் ஆறு கழிவறைகள் கட்டும் பணி நடக்கிறது. இந்த பணிகள் வரும் பிப்ரவரியில் முடியும்.

அதன்பின், புனரமைக்கப்பட்ட கட்டடத்தில், ராயபுரம் சார் பதிவாளர் அலுவலகம், வடசென்னை இணை -1 சார் பதிவாளர் அலுவலகம், உதவி பதிவு துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்டவை வர உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

‘திறந்தவெளிகழிப்பறையாகும் அவலம்’

இதுகுறித்து, வழக்கறிஞர்கள் கூறியதாவது:

புனரமைக்கப்பட்ட ராஜாஜி சாலை சார் பதிவாளர் அலுவலகத்தை, இரண்டு ஆண்டுகளாக திறக்காததால், இரவு நேரங்களில், ‘குடிமகன்’கள் மது அருந்தும் இடமாகவும், பொது கழிவறையாகவும் பயன்படுத்த வருகின்றனர்.

பாரம்பரியமிக்க கட்டடம், திறந்தவெளி கழிப்பறையாக மாற்றப்பட்டது வேதனை அளிக்கிறது. கட்டடத்தின் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. ‘குடிமகன்’கள் வருவதையும், திறந்தவெளி கழிவறையாக மாற்றப்படுவதையும் தடுப்பது அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இரண்டாவது பாரம்பரிய கட்டடம்’

பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள, 254 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாறு சிறப்புமிக்க ஹுமாயூன் மஹால், பொதுப் பணி துறையின் கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டத்தால், 34 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டது. அதற்கு அடுத்து, 160 ஆண்டுகள் பழமையான, ராஜாஜி சாலை பதிவுத்துறை அலுவலக கட்டடம், புதுப்பிக்கப்பட்ட இரண்டாவது பாரம்பரிய கட்டடமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *